×

2 மாதத்துக்கு மேல் அட்வான்ஸ் கூடாது மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்: இனி தனியார் நிறுவனங்களும் களமிறங்கும்

புதுடெல்லி: வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இச்சட்டத்தில் 2 மாதத்திற்கு மேல் அட்வான்ஸ் வாங்கக் கூடாது, தனியார் நிறுவனங்களும் வாடகைக்கு வீடுகளை விடலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மாதிரி வாடகை சட்டம் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை வாடகை அல்லது குத்தகைக்கு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு முழு தீர்வு வகையில் தற்போதுள்ள வாடகை சட்டம் இல்லை. எனவே, வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும் அல்லது தற்போதுள்ள வாடகை சட்டங்களில், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டு வரவும், மாதிரி வாடகை சட்டம் உருவாக்கப்பட்டது.இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: * வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் வாங்க முடியாது.* வாடகை ஒப்பந்த நகலை மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.* மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்தால் மட்டுமே, நிவாரணம் கோரி இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும்.* வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.* இது தவிர மேலும் பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் வீட்டு வாடகை தொடர்பான சட்ட கட்டமைப்பை மாற்றியமைக்க மாதிரி வாடகை சட்டம் உதவும். இது ஒட்டு மொத்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். வீடுகள் இல்லாத நிலை தீர்க்கப்படும். இந்த மாதிரி வாடகை சட்டத்தால், வாடகை வீடுகள் படிப்படியாக முறையான சந்தையாக மாறுவதன் மூலம் நிறுவனமயமாக்க முடியும். காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம், வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வீடு பற்றாக்குறை பிரச்னை நீங்கும்’ என கூறப்பட்டுள்ளது.இது தவிர, கனிம வளத்துறையில் இந்தியா- அர்ஜென்டினா ஆகியவை ஒத்துழைப்புடன் செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், இந்தியா-மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ,ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் இடையே ஊடகத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது….

The post 2 மாதத்துக்கு மேல் அட்வான்ஸ் கூடாது மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்: இனி தனியார் நிறுவனங்களும் களமிறங்கும் appeared first on Dinakaran.

Tags : central cabinet ,New Delhi ,Union Cabinet ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...